அசிசி புனித பிரான்சிஸ்

பிரான்சிஸின் பாதையில் மீண்டும் ஒரு பயணம்…

திரு அவையை நற்செய்தியின் ஒளியில் பயணிக்க வாருங்கள் செல்வோம்…

இதழில் அச்சான வடிவில்

பிரான்சிஸின் பாதையில் மீண்டும் ஒரு பயணம்… · இதழ் 1 · பக்கங்கள் 4–7

இதழின் பக்கம் 4: பிரான்சிஸின் பாதையில் மீண்டும் ஒரு பயணம்…
பக்கம் 4
இதழின் பக்கம் 5: பிரான்சிஸின் பாதையில் மீண்டும் ஒரு பயணம்…
பக்கம் 5
இதழின் பக்கம் 6: பிரான்சிஸின் பாதையில் மீண்டும் ஒரு பயணம்…
பக்கம் 6
இதழின் பக்கம் 7: பிரான்சிஸின் பாதையில் மீண்டும் ஒரு பயணம்…
பக்கம் 7

உரையாகப் படிக்க

இதே கட்டுரை எளிய உரையாக: கைப்பேசியில் படிக்க, தேட, நகலெடுக்க அல்லது மொழிபெயர்க்க எளிது.

எண்ணூறு ஆண்டுகளுக்கு முன், இத்தாலியின் உம்பிரியா மலைகளில், ஒரு இளைஞன் தன் தந்தையின் விலையுயர்ந்த ஆடைகளை அசிசி ஆயரின் முன் கழற்றி வைத்தான். "இதுவரை பீட்ரோ பெர்னார்டோனை என் தந்தை என்று அழைத்தேன். இனி 'விண்ணகத்திலிருக்கும் எங்கள் தந்தையே' என்று மட்டுமே சொல்வேன்" என்றான். ஊர் மக்கள் வியந்தனர்; சிலர் சிரித்தனர். ஆனால் அந்தக் கணத்தில் திரு அவையின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியது.

அந்த இளைஞன்தான் பிரான்சிஸ். இன்று, அவருடைய இறப்பின் 800ஆம் ஆண்டு நினைவில், அவர் நடந்த பாதையில் மீண்டும் ஒரு பயணம் மேற்கொள்ள நம்மை அழைக்கிறோம். கால்களால் அல்ல, இதயத்தால் செய்யும் பயணம் இது. ஒவ்வொரு இடமும் ஒரு பாடம்; ஒவ்வொரு பாடமும் நம் வாழ்க்கைக்கான ஒரு அழைப்பு.

"பிரான்சிஸ், போ; இடிந்து விழும் என் இல்லத்தைச் சீர்செய்."

— சான் தமியானோ சிலுவையின் குரல்

முதல் நிறுத்தம்: அசிசி — கனவுகளின் நகரம்

பிரான்சிஸ் 1181 அல்லது 1182ஆம் ஆண்டில் அசிசியில் பிறந்தார். தந்தை பீட்ரோ பெர்னார்டோன் பெரும் துணி வணிகர்; தாய் பிகா, மென்மையும் பக்தியும் நிறைந்தவர். திருமுழுக்கில் அவருக்கு "ஜொவான்னி" என்று பெயரிட்டனர். ஆனால் பிரான்ஸ் நாட்டை நேசித்த தந்தை, அவரை "பிரான்செஸ்கோ" — சிறிய பிரெஞ்சுக்காரன் — என்று அழைக்கத் தொடங்கினார். அந்தப் பெயரே நிலைத்தது.

இளமையில் பிரான்சிஸ் விருந்துகளின் நாயகன். பாடல், இசை, நண்பர்கள், அழகிய உடைகள் — இவையே அவர் உலகம். வீரத்தையும் புகழையும் கனவு கண்டு, மாவீரனாக வேண்டும் என்று ஆசைப்பட்டார். 1202இல் அண்டை நகரான பெருஜியாவுக்கு எதிரான கொலெஸ்ட்ராடா போரில் கலந்துகொண்டு, சிறைப்பட்டு, ஓராண்டு கைதியாகக் கிடந்தார்.

"ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டும் என நீர் விரும்புகிறீர்?"

— பிரான்சிஸின் இளமைக் கால வேண்டுதல்

நோயிலிருந்து எழுந்தவர் முன்பு போல இல்லை. உலகின் இன்பங்கள் அவருக்குச் சுவையற்றவையாகத் தோன்றின. மீண்டும் போருக்குப் புறப்பட்டபோது, ஸ்போலெத்தோ நகரில் ஒரு கனவில் "தலைவனுக்குப் பணி செய்வது நல்லதா, பணியாளனுக்குப் பணி செய்வது நல்லதா?" என்ற குரலைக் கேட்டார். அவர் அசிசிக்குத் திரும்பினார் — வீரனாக அல்ல, தேடுபவனாக.

இரண்டாம் நிறுத்தம்: சான்

தமியானோ

அசிசிக்குக் கீழே, ஒலிவ மரங்களுக்கு நடுவே, பாழடைந்து கிடந்த ஒரு சிறிய ஆலயம் — சான் தமியானோ. அங்கே தொங்கிய பைசாந்திய பாணி சிலுவையின் முன் மண்டியிட்டு ஜெபித்தபோது, பிரான்சிஸ் ஒரு குரலைக் கேட்டார்: "பிரான்சிஸ், போ; இடிந்து விழும் என் இல்லத்தைச் சீர்செய்."

முதலில் அதை அப்படியே புரிந்துகொண்டார். கற்களைச் சுமந்து, சுவர்களைக் கட்டினார். ஆனால் காலப்போக்கில் அவருக்குப் புரிந்தது — இறைவன் கேட்டது கல்லால் ஆன கட்டடத்தை மட்டுமல்ல; உயிருள்ள கற்களால் ஆன திரு அவையை. நற்செய்தியின் எளிமைக்கு அவள் திரும்ப வேண்டும்.

மூன்றாம் நிறுத்தம்:

தொழுநோயாளரின் அரவணைப்பு

ஒருநாள் குதிரையில் சென்றபோது வழியில் ஒரு தொழுநோயாளரைக் கண்டார். அருவருப்பில் விலகிச் செல்ல நினைத்த மனம், ஒரு கணத்தில் மாறியது. இறங்கி, காசு கொடுத்து, அந்தக் கையை முத்தமிட்டார். பின்னாளில் தன் "சான்றேட்டில்" (Testament) அவர் எழுதினார்: "நான் பாவத்தில் இருந்தபோது தொழுநோயாளரைப் பார்ப்பது மிகக் கசப்பாக இருந்தது. ஆண்டவரே என்னை அவர்களிடையே அழைத்துச் சென்றார்; அவர்களுக்கு இரக்கம் காட்டினேன். அவர்களை விட்டு வந்தபோது, கசப்பாகத் தோன்றியது உள்ளத்துக்கும் உடலுக்கும் இனிமையாக மாறியிருந்தது."

சான் தமியானோ — பாழடைந்த இந்தச் சிற்றாலயத்தில்தான் சிலுவை பேசியது
சான் தமியானோ — பாழடைந்த இந்தச் சிற்றாலயத்தில்தான் சிலுவை பேசியது

இன்று நமக்கு

நம் குடும்பத்தில், பங்கில் "இடிந்து விழும்" பகுதிகள் எவை? சீர்செய்யும் அழைப்பு இன்றும் ஒலிக்கிறது.

யாத்திரைப் பாதை: ஒன்பது நிறுத்தங்கள்

1209/10 — ◆ நான்காம் நிறுத்தம்: போர்சியுங்குலா

அசிசிக்குக் கீழே சமவெளியில் இருந்த "சிறிய பங்கு" — போர்சியுங்குலா — என்ற சிற்றாலயத்தையும் பிரான்சிஸ் சீர்செய்தார். 1208இல் அங்கே திருப்பலியில் வாசிக்கப்பட்ட நற்செய்தி அவர் வாழ்வை முழுமையாக மாற்றியது: "பொன், வெள்ளி, செப்புக் காசு எதையும் கொண்டு போகாதீர்கள்… இரண்டு அங்கிகள் வேண்டாம்" (மத் 10:9-10). "இதுதான் நான் தேடியது!" என்று மகிழ்ந்து, காலணிகளைக் கழற்றி, கயிற்றை இடுப்பில் கட்டி, நற்செய்தியை வாழத் தொடங்கினார்.

ஐந்தாம் நிறுத்தம்: முதல்

சகோதரர்கள்

அசிசியின் செல்வந்தர் பெர்னார்டோ குயிந்தவாலே முதலில் சேர்ந்தார்; தொடர்ந்து சட்ட வல்லுநர் பீட்ரோ கத்தானி, எளிய உள்ளம் கொண்ட எஜிதியோ. "ஆண்டவர் எனக்குச் சகோதரர்களைக் கொடுத்தார்; நான் என்ன செய்ய வேண்டும் என்று யாரும் காட்டவில்லை. உன்னதரே, திருநற்செய்தியின் முறைப்படி வாழ வேண்டும் என்று எனக்கு வெளிப்படுத்தினார்" என்று பிரான்சிஸ் பின்னாளில் எழுதினார்.

பன்னிரண்டு பேராக வளர்ந்த அந்தச் சிறு குழு, ரோமுக்குச் சென்று திருத்தந்தை மூன்றாம் இன்னசென்டிடம் தங்கள் எளிய வாழ்வுமுறைக்கு ஒப்புதல் கேட்டது. "சிறிய சகோதரர்கள்" (Friars Minor) — இதுவே அவர்கள் தங்களுக்கு வைத்துக்கொண்ட பெயர். யாருக்கும் மேலாக அல்ல, எல்லோருக்கும் கீழாக இருப்பவர்கள்.

  1. அசிசி (1181)
    பிறந்த ஊர்; மனமாற்றத்தின் தொடக்கம்
  2. சான் தமியானோ (1205)
    சிலுவையின் அழைப்பு; பின்னர் கிளாராவின் இல்லம்
  3. போர்சியுங்குலா (1208)
    'சிறிய பங்கு' — சபையின் தாய்வீடு; இறப்பின் இடம்
  4. ரிவோதோர்த்தோ
    முதல் சகோதரர்களின் எளிய குடிசை
  5. ரோம்
    திருத்தந்தை இன்னசென்ட் III வாழ்வுமுறைக்கு ஒப்புதல்
  6. கூப்பியோ
    ஓநாயோடு செய்த சமாதானம் (மரபுக் கதை)
  7. கிரெச்சியோ (1223)
    முதல் கிறிஸ்து பிறப்புக் குடில்
  8. லா வெர்னா (1224)
    ஐந்து காயங்கள் பெற்ற மலை
  9. போர்சியுங்குலா (1226)
    'சகோதரி மரணத்தை' வரவேற்ற இடம்

* நிறுத்தங்கள் வரலாற்று வரிசையில்; ஆண்டுகள் அண்ணளவானவை.

உம்பிரியா மலைகள் — பிரான்சிஸ் நடந்த நிலம்
உம்பிரியா மலைகள் — பிரான்சிஸ் நடந்த நிலம்

பயணக் குறிப்பு

அசிசி செல்ல முடியாதவர்களும் இந்தப் பயணத்தை மேற்கொள்ளலாம்: ஒவ்வொரு வாரம் ஒரு "நிறுத்தத்தை" எடுத்து, அதன் கதையை வாசித்து, ஒரு சிறிய செயலால் வாழ்ந்து பாருங்கள்.

லா வெர்னா முதல் போர்சியுங்குலா வரை

வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் பிரான்சிஸ் உடல் நலிந்தார்; கண்கள் ஒளி இழந்தன. ஆனால் உள்ளம் இன்னும் ஒளிர்ந்தது. 1224ஆம் ஆண்டு செப்டம்பரில், தூய சிலுவையின் மகிமைத் திருநாளை ஒட்டி, லா வெர்னா மலையில் நோன்பிருந்து ஜெபித்தபோது, சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவின் காயங்களைத் தன் உடலில் பெற்றார் என்று அவருடைய வாழ்க்கை வரலாறுகள் சான்று பகர்கின்றன.

அன்பின் உச்சம் — நேசித்தவரைப் போலவே ஆகிவிடுவது.

1225இல், சான் தமியானோவில் கிளாராவும் சகோதரிகளும் அவரைப் பராமரித்தபோது, கடும் வலியின் நடுவே "படைப்புகளின் பாடலை" இயற்றினார். இருளில் கிடந்தவர் ஒளியைப் பாடினார்; வலியில் இருந்தவர் புகழ்ச்சியைப் பாடினார். அந்தப் பாடலை இந்த இதழின் 24ஆம் பக்கத்தில் முழுமையாக வாசிக்கலாம்.

1226 அக்டோபர் 3 மாலை, தன்னைப் போர்சியுங்குலாவுக்குக் கொண்டு செல்லச் சொன்னார். தன் ஆடைகளைக் களைந்து வெறுந்தரையில் கிடத்தச் சொன்னார் — பிறந்தபோது போலவே ஏழையாக இறைவனிடம் திரும்ப. சகோதரர்கள் யோவான் நற்செய்தியின் 13ஆம் அதிகாரத்தை வாசித்தனர். திருப்பாடல் 142ஐப் பாடியபடி அவர் கண்மூடினார். அன்று இரவு, அந்தக் கூரையின் மேல் வானம்பாடிப் பறவைகள் கூட்டமாகப் பாடின என்று மரபு கூறுகிறது.

இறுதி வார்த்தைகள்

இன்று நாம் எப்படி அவர்

பாதையில் நடப்பது?

பிரான்சிஸைப் பின்பற்றுவது என்பது துறவற உடை அணிவது மட்டுமல்ல. குடும்பத் தலைவர்களும், மாணவர்களும், தொழிலாளர்களும், முதியோரும் — எல்லோரும் அவர் பாதையில் நடக்கலாம். இதோ ஐந்து அடிச்சுவடுகள்:

எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் அசிசியின் ஒரு இளைஞன் "ஆம்" என்று சொன்னதால் உலகமே மாறியது. இன்று நம் "ஆம்" எதை மாற்றும்? பயணம் தொடங்கட்டும்.

படைப்புகளின் நண்பர் — மான், ஆடு, ஓநாய் — எல்லாமே சகோதரர்கள்
படைப்புகளின் நண்பர் — மான், ஆடு, ஓநாய் — எல்லாமே சகோதரர்கள்
  • நற்செய்தியைக் கையில் எடு: தினமும் ஒரு பகுதியை வாசித்து, ஒரு வரியை நாள் முழுதும் நினைவில் வை.
  • எளிமையைத் தேர்ந்தெடு: தேவைக்கு மேல் வாங்குவதைக் குறை; பகிர்வதை அதிகரி.
  • ஓரத்தில் இருப்பவரைத் தேடு: தனிமையில் இருக்கும் ஒருவரை இந்த வாரம் சந்தி.
  • படைப்பைப் போற்று: ஒரு மரம் நடு; தண்ணீரையும் மின்சாரத்தையும் வீணாக்காதே.
  • அமைதியின் கருவியாக இரு: பிரிந்த ஒரு உறவில் முதல் அடியை நீயே எடு.

"சகோதரர்களே, நான் என் பங்கைச் செய்துவிட்டேன்; உங்கள் பங்கைக் கிறிஸ்து உங்களுக்குக் கற்பிப்பாராக."

— புனித பொனவெந்தூர் பதிவுசெய்த பிரான்சிஸின்